3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த மாதம் 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்பதால், இயல்பை விட வெப்பநிலை மேலும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் கானல் நீர் காட்சிகள் தெரிகின்றன. இரவு நேரங்களில் புழுக்கத்தினால் பலரது உறக்கமும் கெடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது தமிழ்நாட்டில் 16 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில் 3 நாட்களாகவே 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கிறது. 2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவசியமான பணிகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்றும் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள், கர்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியே செல்ல வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சாலையோரத்தில் தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரிப்பழம், வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட பல்வேறு கடைகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திங்கள்கிழமை பதிவான வெப்ப அளவு: அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி ஃபேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
- சென்னை நுங்கம்பாக்கம் – 105.44
- சென்னை மீனம்பாக்கம் – 105.44
- கடலூர் – 102.92
- ஈரோடு – 103.64
- கரூர் பரமத்தி – 104.9
- மதுரை நகரம் – 102.2
- மதுரை விமான நிலையம் – 103.28
- நாகப்பட்டினம் – 100.04
- பரங்கிப்பேட்டை – 104.36
- நாமக்கல் – 100.4
- பாளையங்கோட்டை – 102.02
- சேலம் – 102.02
- தஞ்சாவூர் – 102.2
- திருச்சிராப்பள்ளி – 103.1
- திருத்தணி – 105.8
- வேலூர் – 108.14
மேலும் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பம் அதிகரிப்பு மற்றும் காற்றின் ஈரப்பதம் குறைவு காரணமாக இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.