பனங்கருப்பட்டிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன. அதில் 50 விழுக்காடு தென் மாவட்டங்களில் இருக்கின்றன. உடல் சூட்டைத் தணிக்கும் பதநீர் , கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு என பல்வேறு உணவுப் பொருளாக மாறுகிறது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டாரப் பகுதியில் பதநீரை காய்ச்சி கருப்பட்டி செய்யப்படுகிறது. ஆனால் அவற்றிற்கு போதிய விலை கிடைக்காததால் பனை வெல்ல உற்பத்தியாளர்கள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து பேசிய பனைத் தொழிலாளர்கள், “பனையில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கருப்பட்டியை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பனை வெல்ல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேலோங்கும்.” என கோரிக்கை வைத்துள்ளனர்.







