தொழில் துறை பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்த, மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், கொரோனா நோயாளிகளுக்கு செலுத்த போதிய ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது,
அப்போது மத்திய அரசு தரப்பில், உரிய ஆக்சிஜன் உருளைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது, ஒரு நாள் தேவைக்கான என்பது 8 ஆயிரம் மெட்ரிக் டன் எனவும், ஆனால், நமது உற்பத்தி 7 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் என்பதால் அதனை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், எந்த ஒரு நோயாளியும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்தனர். நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை என்றும் நீதிபதிகள் கூறினர்.

மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள், தனியார் நிறுவனங்களை அணுகுங்கள், எதையாவது செய்யுங்கள் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைக்கு திருப்பி அனுப்புங்கள் என யோசனை கூறிய நீதிபதிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் எவரேனும் உயிழந்தால், அதற்கு மத்திய அரசே முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என எச்சரித்து, வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.







