பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம்; ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி நோட்டீஸ்…

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம்…

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம் முழுவதும் இருந்தும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வ.உ.சி. மைதானம் இருக்கிறது. இந்த மைதானத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பார்வையாளர் கூடத்துடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.14.95 கோடி ஒப்பந்தம் கூறப்பட்டது.

நாமக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பணிகள் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டு, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. பிரம்மாண்டமான மேடை, 6 பார்வையாளர் மாடம், பூங்கா மற்றும் நவீன இருக்கைகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இந்த மைதானம் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்வேறு விழாக்களும் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்றைய தினம் பலத்த காற்றுடன், கனமழை பெய்த சூழலில் பார்வையாளர் மானத்தின் மேல் கூரை தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பணிகள் முடிக்கப்பட்டு எட்டு மாதங்களில் கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக சமூக வலைதளங்களிலும், அரசியல் கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஒப்பந்தக்காரருக்கு மாநகராட்சி ஆணையாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸில்,  “கட்டிடம் கட்ட, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதா? தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா? ” உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த நோட்டீஸ்க்கு குறுகிய காலத்திற்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநயினார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் பாண்டுரங்கன் மற்றும் குழுவினர் விபத்து நடந்த மாடத்தை ஆய்வு செய்ததுடன், கட்டி முடிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் அளவெடுத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, பொறியாளர்கள் குழு, மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழாக கட்டப்பட்ட கட்டிடங்களையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.