தனது வாழ்நாளில் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வது லட்சியம் என்று கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.13.99 லட்சம் சைக்கிளை பெற்ற மேட்டுப்பாளையம் மாணவி தபித்தா பேட்டியளித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்தவர்
மாணவி தபித்தா. இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தனது தந்தை உயிரிழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த தபித்தா, தன் சக நண்பர்கள் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அதையே தனது எதிர்காலம் என கருதி தனது முழு கவனத்தையும் அதில் செலுத்தி வந்தார். இதை தொடர்ந்து, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில், கவுகாத்தியில் நடந்த 14 வயதுடையோருக்கான தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி மாணவி தபித்தாவுக்கு எழுச்சியை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்கில் நடந்த தேசிய மகளிர் இளையோர் பிரிவில் தங்க பதக்கம் வென்றார்.
தொடர் வெற்றியின் காரணமாக தனது திறமைகளை மேலும் மேம்படுத்த கேரளாவில் உள்ள மத்திய பயிற்சி மையத்தில் தனது நலன் விரும்பிகளின் ஆதரவோடு சேர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். சர்வதேச அளவில் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது.
இருப்பினும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தபித்தாவுக்கு தனக்கான சைக்கிளை வாங்கும் அளவிற்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் தபித்தா, தனது குடும்பம் பற்றியும் தனது கனவு பற்றியும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். இதை தொடர்ந்து, மாணவி தபித்தாவின் கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சைக்கிள் பந்தய கனவை நினைவாக்க ரூ.13.99 லட்சம் மதிப்பில் மாணவிக்கான சைக்கிளை அழித்து அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தனது துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் மாணவியை அடையாளம் கண்டு, அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, “ஆர்கன் 18” என்ற அதிநவீன சைக்கிளை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதயநிதி வழங்கியுள்ளார். வெறும் மூன்று கிலோ எடை கொண்ட இந்த சைக்கிள் இத்தாலி நாட்டில் தயாரிக்கபட்டதாகும். பிரத்யேக வடிவமைப்பு கொண்ட இந்த சைக்கிளை, அதற்கென அமைக்கப்பட்ட ஓடுதள பாதைகளில் மட்டுமே இயக்க முடியும்.
தனது வாழ்நாளில் இந்த அளவிற்கு பணம் கொடுத்து அந்த சைக்கிளை வாங்க முடியாது என்றாலும், அதனையே தனது லட்சியமாக கொண்டு விடா முயற்சியை மேற்கொண்ட மாணவி சபித்தா, இன்று தமிழ்நாடு அரசின் மூலமாக தனது கனவை நனவாக்கி உள்ளார். அதே சமயத்தில் தனது கல்வியும் பாதிக்காத வகையில் படிக்கவும் செய்த சபித்தாவை பள்ளி ஆசிரியர்களும் ஊக்கம் அளித்து மாணவிக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியுள்ளனர். இதனால் அவர் பத்தாம் வகுப்பு தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.
சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று நாட்டிற்காக விளையாடி வெல்வது மட்டுமே லட்சியம் என கூறும் தபித்தா தனக்கு உதவிய தமிழ்நாடு அரசுக்கும் விளையாட்டு துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.







