விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!

பழனியில், தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.  அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், பழனியருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர்…

பழனியில், தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.  அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், பழனியருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம்
(35). கூலித் தொழிலாளியான இவர் பழனியில் இருந்து பாப்பம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாப்பம்பட்டி பிரிவு அருகே, பள்ளி பேருந்து ஒன்று இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து அவருடைய உடலை உடற் கூராய்வு செய்வதற்காக
பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விபத்து குறித்து பழனி
தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் முருகானந்தத்தின் உறவினர்கள் நூற்றுக் கணக்கானோர் திரண்டனர். அப்போது அவர்கள் முருகானந்தத்தின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், முறையான விசாரணை வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது முருகானந்தத்தின் உறவினர் ஒருவர் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த முருகானந்தத்தின்
உறவினர்களை அடித்து விரட்டினர். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.