புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. மதுரை சின்னப்பட்டியை சார்ந்த தமிழரசன், 24 காளைகளை பிடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இன்று காலை மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாட்டு பொங்கள் தினமான இன்று பாலமேட்டில் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஒன்பது சுற்றுகளாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 827 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 306 மாடுபிடி வீரர்கள் களத்தில் காளைகளோடு விளையாடினர். கடைசி சுற்று நிறைவடைந்த நிலையில் நடுவர் குழுவின் சார்பாக இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில்..
மதுரை மாவட்டம் சின்னப்பட்டியைச் சார்ந்த சந்தனம் எண்: 146 ஐ கொண்ட தமிழரசன், 24 காளைகளை பிடித்து முதல் இடம் பிடித்துள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் பாலமேடைச் சார்ந்த ரோஸ் எண்: 73 ஐ கொண்ட மணி 19 காளைகள் பிடித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது
அதேபோல பாலமேடைச் சார்ந்த மஞ்சள் எண்: 4 ஐ கொண்ட ராஜா 15 காளைகளை பிடித்து மூன்றாம் இடத்தையும் மதுரை மாவட்டம் பொதும்பைச் சார்ந்த நீலம் எண் 181 ஐ கொண்ட பிரபாகரன் 12 காளைகளை பிடித்து நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிகட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட கருப்பண சாமி கோவில் காளைக்கு இருசக்கர வாகனம் பரிசாக அதன் உரிமையாளருக்கு வழங்கப்பட உள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டின் முடிவில் 12 மாடுபிடி வீரர்கள், 15 மாட்டு உரிமையாளர்கள் ,
9 பார்வையாளர்கள் , காவல்துறையைச் சார்ந்த ஒருவர் மற்றும் பத்திரிக்கையளர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். 9 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் பாலமேட்டை சேர்ந்த அரவிந்த்ராஜன் (25) வயிற்றில் காயங்களுடன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.