ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலை, நடப்பாண்டு மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள் என கர்நாடக அரசியல் சூடுபிடித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய போதிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் இந்த முறை கர்நாடகாவை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நேரடியாக அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற “நா நாயகி” என்ற கட்சி மாநாட்டில் பேசிய பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ‘கிரஹ லக்ஷ்மி’ என்ற திட்டத்தின்கீழ், ஒவ்வொரு இல்லத்தரசிக்கும், மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதன்மூலம் 1.5 கோடி இல்லத்தரசிகள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் , கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். இது பலரையும் கவர்ந்துள்ள நிலையில், இரண்டாவது மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதியாக, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.