தமிழ் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர் பூமணி இன்று உடல் நலக்குறைவாள் உயிரிழந்தார். அவருக்கு பல்வேறே அரசியல் கட்சித் தலைவர்கள், இலக்கியவாதிகள் இரங்கல் தெருவித்து வருகின்றனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழுத்தாளர் பூமணிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழின் மூத்த படைப்பாளி பூமணி அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை, குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையை, அழுத்தமான குரலில் பதிவு செய்த பூமணி அவர்களின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம் பெற்றவை. அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மார்க்சியத்தையே தன் வாழ்க்கைக் கண்ணோட்டமாகக் கொண்ட இடதுசாரி சிந்தனையாளராக வாழ்ந்தார்.
அவரது எழுத்துக்களில் வெளிப்பட்ட சாதி எதிர்ப்புணர்வும், உழைக்கும் மக்கள் மீதான அவரது நேசமும் ஒரு முற்போக்கு படைப்பாளிக்குரிய பண்பாகும். தமிழின் இந்த மகத்தான படைப்பாளியை இழந்திருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கும், முற்போக்கு சிந்தனைப் பரப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் தோழர் பூமணி மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நேசர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




