விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக வேளாண்மை பட்ஜெட் உள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பச்சை நிற துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், மதுரை மல்லி இயக்கம், விவசாயிகளுக்கு அயல்நாட்டில் பயிற்சி, வாட்ஸாப் குழு உருவாக்குதல், விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண், உழவர்கள் நலன் பெற புதிய இணையதளம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும், 10 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு, தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவை முடிந்த பிறகு வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வேளாம் பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாகவே இது உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு ஆதார விலையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் ஊக்கத் தொகையாக வெறும் 195 ரூபாய் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே தெரிகிறது இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்று .
மானியக் கோரிக்கையில் இடம் பெற்றது மட்டுமே நிதிநிலை அறிக்கையில் உள்ளது. விவசாயிகளை ஏமாற்றும் அரசாகவே திமுக உள்ளது. பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் அதிகளவு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பெற்றுத்தந்தது அதிமுக அரசு. கடலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இவற்றையெற்றாம் திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. குடிமாராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டனத்திற்குரியது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார்கள். இதைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று சொன்னவர்கள், அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று பார்த்தால், நெல் ரகங்களை பிரித்து 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது அனைத்து விவசாயிகளுக்கும் ஏமாற்றமாக இருக்கும்.
அதிமுக ஆட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 13,500 ரூபாய் தான் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தும், இந்த அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டில் வேளாண் மக்களின் நலனுக்கான எந்த வித புதிய திட்டங்களும் இடம்பெற வில்லை. வேளாண் பட்ஜெட் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியே இன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
- பி.ஜேம்ஸ் லிசா










