கார்ல் மார்க்ஸ் அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் சென்னையில் அவருக்குப் புதிதாகத் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின் பயனாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை, எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தார்.
அப்போது கார்ல் மார்க்ஸ் பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது கார்ல் மார்க்ஸ் சிலைக்கு முன்பாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மத்தியில் ‘கார்ல் மார்க்ஸ்சுக்கு வீரவணக்கம்’ என்று முழக்கமிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







