உலகத்தை நாம் ஒரே குடும்பமாக கருதுகிறோம்; குடும்பத்தில் உள்ளவர்கள் நெருக்கடியில் உள்ளபோது அவர்களுக்கு உதவுவது இந்தியாவின் கடமை என துருக்கியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவிகளைச் செய்தன. இந்தியா சார்பில் `ஆப்ரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்பு குழுவினர் துருக்கி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 3 பிரிவின் 151 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், தேசிய பேரிட மீட்புக் குழுவின் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டன.
இந்நிலையில், மீட்புப் பணிகளை முடித்துக் கொண்டு துருக்கியில் இருந்து இந்திய குழுவினர் இன்று நாடு திரும்பினர். அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: சாலையில் அறுந்து விழுந்த மின்வயர்- குழந்தையை பள்ளியில் விட்டு வந்தவர் உயிரிழப்பு
பின்பு அவர்கள் முன் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: நீங்கள் பெரும் சேவையை செய்துள்ளீர்கள். உங்கள் சேவையால் நாடு பெருமை கொள்கிறது. ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் ஒரே குடும்பமாக பார்க்கிறோம். குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினையில் இருக்கும் போது அவர்களுக்கு உதவுவது நம் கடமை. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக தனது அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா முதன்மையாக உள்ளது. உலகத்தில் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் அதற்கு முதலில் குரல்கொடுப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. உலகின் மிகச் சிறந்த மீட்பு குழுவாக நமது அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.








