“அனைத்தையும் இழந்து தவிக்கும் நேபாளத்து மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!” – திருமாவளவன்

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் போடேகோஷி என்னும் நதியில் பெருக்கெடுத்துச் சீறிய பெருவெள்ளம் நெஞ்சை உலுக்கும் பெருந்துயரம். அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. அடுத்தடுத்து வெளிவரும் காணொளிகள் சகித்துக் கொள்ள இயலாத கடும் வலிகளைத் தருகிறது.

திபெத்தின் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் பல மாவட்டங்களில் பெருமளவிலான உயிரிழப்பும் கடும் சொத்துத்சேதமும் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பனிப்பாறைகளின் வெடிப்பினால் உருவான மிகப்பெரும் சரிவினால் (Glacial Lake Outburst Flood) தான் இந்தப் பேய் வெள்ளம் பேருருக் கொண்டு கோரத் தாண்டவம் ஆடியுள்ளது1. நேபாளம் இதுவரை சந்திக்காத ஈடுசெய்ய இயலாத மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்துள்ளது. கண்ணிமைக்கும் துளிப்பொழுதில் எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனது. இதுவரை கிடைத்த தரவுகளின் படி 389 பேர் உயிரிழந்துள்ளனர்; பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 910 பேர் பற்றிய தகவல்கள் ஏதும் கிட்டவில்லை. குறிப்பாக, தமிழர்கள் உள்ளிட்ட 288 இந்தியர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.

ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா, சித்வான் மற்றும் நவல்பராசி ஆகிய மாவட்டங்களில் மதிப்பிட இயலாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆறு பெரிய நீர்மின் நிலையங்கள் சிதைவடைந்து மின்சார சேவை முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. 17,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் நிலை உள்ளதாக ‘யுனிசெஃப்’ அறிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், போடேகோஷி நதியின் மேல்பகுதியில் உருவான மிகப்பெரும் ஆழத்தில் நீர் தேக்கமடைந்து புதிதாக உருவாகியுள்ள ஏரி, கூடுதல் நீர்வரத்தினால் பாதிப்படைந்து மேலும் பெருவெள்ளம் பெருக்கெடுக்கும் பெருந்தீங்கு நிதன்னஉள்ளதாகவும் வல்லுநர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள அரசு மேற்கொண்டு அதிரடி மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா அரசு முதல் கட்ட நிவாரண பொருட்களையும் அனுப்பியுள்ளது. இந்தப் பெருவெள்ளத்தால் கைலாஷ் – மானசரோவர் யாத்திரையில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இந்தப் பேரழிவு பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் யாவருக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம். அத்துடன், உற்றார் உறவினர் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து உயிர்மட்டும் தப்பிப் பிழைத்துள்ள நேபாளத்து மக்கள் உள்ளிட்ட யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.