பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகம் – இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்

பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களின் தன்மை குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் வகையில் புதிய திட்டத்தை அறிக்கையாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சிப்ஸ் உள்ளிட்ட பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களின் தன்மை குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் வகையில் புதிய திட்டத்தை அறிக்கையாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பாக்கெட் உணவுகளின் ஊட்டச்சத்து சார்ந்த அபாயங்கள் குறித்து நுகர்வோருக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் முன்புறத்தில் எச்சரிக்கை வாசக லேபிள்களை அறிமுகப்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய குறிப்பை அறிமுகப்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணை வந்தபோது, உத்தரவை செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்கக் கூடாதா? குறிப்பாக வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா? பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை அறிவிப்பு செய்வதில் என்ன தயக்கம் ? என கோபமாக கேள்விகள் எழுப்பி, இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இவ்வழக்கில் 6 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பாக்கெட் உணவுகளின் முன்புறத்தில் சிவப்பு நிற அறுகோண வடிவ எச்சரிக்கை லேபிள் இடம்பெற முன்மொழிந்துள்ளது. முதற்கட்டமாக, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் எச்சரிக்கை லேபிள் இடம்பெறும் என்றும், 2-வது கட்டத்தில் ஏதேனும் ஒரு ஊட்டச்சத்து அதிகமாக இருந்தாலே எச்சரிக்கை லேபிள் இடம்பெறும் வகையில் விதிமுறையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அதிக கொழுப்பு , அதிக சக்கரை அளவு , அதிக உப்பு உள்ளிட்ட எச்சரிக்கைகள் இடம்பெறும் என்றும் நெய், சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, வெல்லம், தேன் போன்ற ஒரே மூலப்பொருள் கொண்ட உணவுகளுக்கு விலக்கு அளிக்க முன் மொழியப்பட்டுள்தாவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.