அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை தற்காலிகமாக கைவிடும் முடிவில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவை தமது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கனவாக உள்ளதாக தெரிகிறது. இதற்கு அக்கட்சியில் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர உள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படையாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்த ஓபிஎஸ் கடந்த சில வாரங்களாக, எடப்பாடி ஆதரவாளர்களிடம் தமக்கு அந்த முடிவில் ஒப்புதல் இல்லை என்பதை நேரடியாக வெளிப்படுத்த தொடங்கிவிட்டாராம். இதனை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி, அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால் ஒற்றைத் தலைமைதான் சரியாக இருக்கும் என கூறியுள்ளதாக தெரிகிறது.
அதற்கு ஓபிஎஸ் எனக்கும் அதில் பெரியளவில் மாற்றுக்கருத்து இல்லை. அதிமுகவின் தலைவராக நம் இரு அணிகளுக்கும் பொதுவானவராக விளங்கும் முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்தியலிங்கத்தை நியமிப்போம் எனக்கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கேட்டு சற்று ஆடிப்போன எடப்பாடி, அந்த நிலைப்பாட்டை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்ற முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் ராஜ்யசபா சீட் விவகாரத்திலும் ஓபிஎஸ் தமது தீவிர ஆதரவாளருக்கு போராடி சீட் வாங்கினார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, சசிகலாவின் பின்ணணியோடு இவை எல்லாம் நடைபெறதோ என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சந்தேகப்படுகின்றனர்.
ஒற்றைத் தலைமை விவகாரத்திற்காகதான் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இத்தனை மாதங்கள் நடைபெறாமல் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கும் இக்கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை சமர்பிக்க வேண்டியுள்ளது. எனவே இறுதியான முடிவை தெளிவாக எடுங்கள் என எடப்பாடிக்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சூழலை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தற்காலிகமாக ஒற்றைத்தலைமை முடிவை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேனுக்கு அப்பதவி நிரந்தரமாக்கப்படும் எனத் தெரிகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது எனவும், நீட் விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களை வஞ்சித்துவிட்டது எனவும், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது மக்களுக்கு வேதனை என்ற நோக்கில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படும் எவ்வித மாற்றங்களும் இன்றி அமைதியாக வழக்கமான ஒரு கூட்டமாகதான் இக்கூட்டம் இருக்கும் எனத் தெரிகிறது.
இராமானுஜம்.கி








