நீட் மட்டுமே தகுதியுள்ள மாணவராக ஒருவரை மாற்றாது- மா.சுப்பிரமணியன்

“நீட் தேர்வு மட்டுமே ஒருவரை தகுதி உள்ள மாணவராக மாற்றாது. நீட் இல்லாமலேயே இவர்கள் தகுதி உடன் பட்டம் பெற்றுள்ளனர்” என்று மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக்…

“நீட் தேர்வு மட்டுமே ஒருவரை தகுதி உள்ள மாணவராக மாற்றாது. நீட் இல்லாமலேயே இவர்கள் தகுதி உடன் பட்டம் பெற்றுள்ளனர்” என்று மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் 186வது இளங்கலை மருத்துவ நிறைவு தின விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றுது. இதில் 250 மாணவர்களுக்கு நிறைவு விழாவில் அமைச்சர் சுப்பிரமணியம் சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க 1664 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டதாகவும், பின்பு மதராஸ் மருத்துவ கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் ராஜீவ் காந்தி மருத்துவமனை என்று பெயர் வைக்கப்பட்டது.
உலகின் 100 சிறந்த மருந்துவக் கல்லூரிகளில் ராஜீவ் காந்தி கல்லூரி 60வது இடத்தை பெற்று உள்ளது. ஆசியாவில் மிக பழமையான கல்லூரி இது எனவும் நீட் வந்த பின்பும், முன்பும் சரி தமிழக மாணவர்களின் முதல் தேர்வாக ராஜீவ் காந்தி மருத்துவமனை தான் உள்ளது. எனது மகன் மாஸ்கோவில் பட்டம் பெற்றார். அப்போது நான் பெற்ற மகிழ்ச்சி எப்படி இருந்ததோ, அதே மகிழ்ச்சி தான் இங்கு இருக்கும் பெற்றோருக்கும் இருக்கும் என்று உணர்கிறேன்.


இந்தியாவில் 302 அரசு கல்லூரிகள், 276 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 578 கல்லூரிகள் உள்ளது. அதில் தமிழகத்தில் 70 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பாகும். நம் வாழ் நாளில் நடைபெற்ற கொடூரம் எதுவென்றால் அது கொரோனா வைரஸ். கொரோனா பல வகைகளில் உருமாற்றம் அடைந்து மக்களை பதற்றத்தில் வைத்துள்ளது. தற்போது குரங்கு அம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழலில் நீங்கள் மருத்துவர்களாக செல்வதால் உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. குறிப்பாக இதில் பிரசாந்த் என்ற மாணவர் 36 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். இவர் உட்பட பிற 5 மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். நீட் மட்டுமே ஒருவரை தகுதி உள்ள மாணவராக மாற்றாது. நீட் இல்லாமலேயே இவர்கள் தகுதி உடன் பட்டம் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “உணவகங்களை பரிசோதனை செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து உள்ளோம். பதப்படுத்தப்படாத இறைச்சினால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. உணவங்களை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது” என்றார். ஆரணியில் பிரியாணி சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர் வயிறு உபாதை ஏற்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.