“அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட வேண்டும் என்று சொல்ல ஓபிஎஸ்க்கு தகுதியில்லை” – கே.பி.முனுசாமி அதிரடி பேட்டி!

அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட வேண்டும் என்று சொல்ல ஓபிஎஸ்க்கு தகுதியில்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும்,  கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான  கே.பி.முனுசாமி  தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.…

அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட வேண்டும் என்று சொல்ல ஓபிஎஸ்க்கு தகுதியில்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும்,  கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான  கே.பி.முனுசாமி  தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக எதிர்கொண்ட மக்களவை தேர்தலில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.  இதனிடையே,  சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தொண்டர்கள் ஒன்றிணைய அழைப்பு விடுத்து நேற்று அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில்,  கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது,

“அதிமுக அலுவலகத்தை உடைத்து பொருட்களை திருடி சென்றவர் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம்.  அவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்தார்.  அவர் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்.  உண்மையான பாசமும் பற்றும் இருந்தால் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பக்கம் அமர்ந்து இருக்க மாட்டார்.

சசிகலா அழைப்பை ஏற்று எத்தனை பேர் அவர் இல்லத்திற்கு சென்று உள்ளார்கள் என நீங்களே பாருங்கள்.  2019 தேர்தலில் கூட்டணியில் இருந்த நாங்கள் 19 சதவீதம் வாக்குகள் பெற்றோம்.  தற்போது தனித்து போட்டியிட்டு 20.46 சதவீதம் வாங்கி உள்ளோம். எங்களது வாக்கு சதவீதத்தை 2 விழுக்காடு அதிகரித்து உள்ளோம்.  ஆனால் திமுக 6 சதவீதம் குறைவாக வாக்கு வாங்கி உள்ளது.

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை சரியாக வழி நடத்தி வருகிறார்.  அதிமுக தொண்டர்களை ஒன்றுபட வேண்டும் என்று சொல்ல ஓபிஎஸ்க்கு தகுதியில்லை.  பண பலம்,  அதிகார பலம்,  படை பலத்தால் ஒரு சில இடங்களில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.  2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடித்து,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம்.  2026 சட்ட மன்றத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.”

இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.