நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் – குழப்பத்தால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி!

நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.  நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி…

நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். 

நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது.  இதில்,  23.33 லட்சம் பேர் பங்கேற்றனர்.  தமிழ்நாட்டில் சென்னை,  மதுரை,  திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் தமிழ்,  ஆங்கிலம்,  ஹிந்தி,  தெலுங்கு,  கன்னடம்,  குஜராத்தி,  மராத்தி, ஒடியா,  அஸ்ஸாமி,  வங்காளம்,  உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில்,  விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 4) வெளியானது.  இதில் நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இத்தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாணவர்கள் உள்பட 67 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.  நிகழாண்டு நீட் தேர்வு எழுதிய 1.52 லட்சம் தமிழக மாணவர்களில்,  89,426 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நிகழாண்டில் அதிக மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதால் கட்-ஆஃப் மதிப்பெண்ணும் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் இரண்டும் மாணவர்கள் மட்டுமே 720 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்த நிலையில் இந்தாண்டு 67 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளது நீட் தேர்வு செயல்முறையின் நேர்மை மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நுழைவுத் தேர்வில் (நீட்) முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளது சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.

மேலும் இரண்டாமிடம்,  மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.  நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால் கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என சக மாணவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது நீட் தேர்வு செயல்முறையின் நேர்மை மீது பல கேள்விகளை எழுப்புகிறது என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.