எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்  சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றம்!

தமிழ்நாடு  சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்க்கட்சித்…

தமிழ்நாடு  சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். 
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈரப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது :
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பலமுறை புகார் அளிக்கப்பட்டும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.  எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்தும் பலமுறை கடிதம் கொடுத்துள்ளோம்.  சுமார் 10 முறை கடிதம் கொடுத்துள்ளோம்.
நீதிமன்ற தீர்ப்புகளை அளித்துள்ளோம்.  என்ன காரணத்திற்காகவோ எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை சபாநாயகர் மறுக்கிறார்.  நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம் என அவர் தெரிவித்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை அவை மரபுப்படி, சட்டப்படி, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் நடைபெறவில்லை என்று கூறினார்.
ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரின்  இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.  உறுப்பினர்கள் அமைதி காக்குமாறும்,  இருக்கைக்கு செல்லுமாறும் சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்.  ஆனால் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவர்களை வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டப்பேரவை  எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் மற்றும்  3 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் குறித்து பல முறை பேரவை தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால்  தீர்வு காணவில்லை. இது குறித்து சட்டமன்றத்தில் பேசினேன்,  முழுமையாக பேச அனுமதி வழங்கவில்லை.
சபாநாயகர்  தனிப்பட்ட அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்,  அதை மறுக்கவில்லை. இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் அருகில் தான் துணை தலைவர் அமர வைக்க வேண்டும். எங்கள் கேள்விக்கு அமைச்சரோ முதலமைச்சரோ பதில் சொல்ல வேண்டும் என நினைக்கிறோம்.  ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் சொல்கிறார்.  இதனால் தீர்வு கிடைக்காமல் போகிறது.  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரை எந்த கட்சியையும்  சாராதவர்கள் என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.