சிறைவாசிகள் விடுதலை: சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது!

சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது செய்யப்பட்டனர். சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக…

சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகிறது.  இந்த நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான  கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசும்போது,  ஆளுநரின் ஒப்புதலுக்கு இதை அனுப்பி காத்திருப்பதாக கூறியிருந்தார்.  பேரறிவாளன்,  ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் 161 வது பிரிவின்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தில் இவர்களது ஜாமீனுக்கு எதிராக வாதிட்ட தமிழக அரசின் நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான  மு.தமிமுன் அன்சாரி தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.  இதனால் ஐஸ்அவுஸ் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  வாகனங்கள் வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டது.

இப்போராட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, SDPI மாநிலச் செயலாளர் AK.கரீம் ,  இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம், விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன்,  சமூக செயல்பாட்டாளர் சுந்தரவள்ளி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.