மோடிக்கு எதிரான வித்தைக்கு வித்திடும் மம்தா

சில மாநிலங்களில் நேர் எதிர்நிலையில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடந்து முடிந்த கோவா சட்டமன்றத்…

சில மாநிலங்களில் நேர் எதிர்நிலையில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடந்து முடிந்த கோவா சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரசும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் ஆம் ஆத்மி கட்சி 6 புள்ளி 8 சதவீத வாக்குகள் பெற்று இரண்டு தொகுதிகளை கைப்பற்றியது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 5 புள்ளியே 2 சதவீத வாக்குகள் பெற்றது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

இந்தநிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மம்தா பானர்ஜி நேற்று டெல்லி வந்தார். அங்கு அவரது மருமகனும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அபிஷேக் பானர்ஜி வீட்டில் தங்கினார். இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி அபிஷேக்கின் டெல்லி இல்லத்திற்கு அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சென்றார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதித்தாக தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி நிர்வாகிகள், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். வேறு ஒன்றும் இல்லை எனக்கூறினர்.

இருப்பினும் பிரதமர் வேட்பாளர் கனவில் இருக்கும் இருவரும் நீண்டநாட்களுக்கு பின்னர் சந்தித்து பேசியதன் மூலம் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இவர்கள் அடித்தளமிடுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதற்கு காரணம், டெல்லி வருவதற்கு முன்னர் கொல்கத்தாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உடனடியாக கொல்கத்தா திரும்ப வேண்டியிருப்பதால், பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வாய்ப்பில்லை எனக்கூறியிருந்தார்.

அதேநேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை மட்டும் சந்தித்தது, எதிர்காலத்திற்கான அரசியல் கணக்கு என்றே கருதப்படுகிறது.

எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தல் சந்திக்காவிட்டால்,  உத்தரபிரதேச நிலையே ஏற்படும் என அரசியல் வல்லுனர்கள் கூறி வரும் நிலையில், மம்தாவும், கெஜ்ரிவாலும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்ப்பார்களா என்ற வினாவுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.