ஆப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ்துவ பெண்ணை, கோவையில் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தாலி கட்டி கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சுப்ரமணியம் – தர்மலட்சுமி தம்பதியரின் மகன் முத்துமாரியப்பன். இவர், 8 ஆண்டுகளாக மேற்குஆப்பிரிக்காவில் உள்ள கேமரூனில் எரிவாயு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வால்மி இனாங்கா மொசொக்கே என்ற கிறிஸ்துவ பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.
அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், தமிழர் முறைப்படி தாலிகட்டி திருமணம் செய்து கொள்ள இனாங்கா விரும்பியதையடுத்து, உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்தனர். கோவை துடியலூர் அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
பட்டுபுடவை கட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஆப்பிரிக்க மணமகளான வால்மி இனாங்காவிற்கு முத்துப்பாண்டி தாலி கட்டினார். தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டதுடன், அம்மி மிதித்து மெட்டி அணிவித்து திருமணம் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து கிறிஸ்துவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








