நீட் தேர்வு குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பரப்பி வருகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் 5415 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உச்சத்தில் தொற்று பரவிய காலத்தில் இருந்து தற்போது வரை பரிசோதனை அளவை குறைக்கவில்லை. நாள் ஒன்றுக்கு 1.30 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மகப்பேறு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி அளிக்கப்படும். மகப்பேறுக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகளைக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆண்டுக்கு 61 % பேருக்கு அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் பார்க்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது, தாயின் உடலுக்கும் குழந்தைக்கும் நல்லதல்ல. குறிப்பிட்ட நாட்களைத் தேர்ந்தெடுத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வைப்பது தவறு என்பதை மருத்துவர்கள் உடனான காணொளி கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளோம். அடுத்ததாக, அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவர்களிடமும் அறிவுறுத்த உள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நீட் குறித்து கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வுக்குத் தமிழகத்தில் இடமில்லை. தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு, நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. தவறான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பரப்பி வருகிறார்’ என்றார்.







