போலி தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகையும் எம்.பியுமான மிமி சக்கரவர்த்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலை, இப்போது குறைந்து வருகிறது. மூன்றாம் அலை தாக்குதலை தொடுக்கும் முன், தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தனியார் அமைப்புகளும் தடுப்பூசி முகாம்களை நடத்துகின்றனர்.
சிலர் போலியான தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கொல்கத்தாவில் இப்படி நடத்தப்பட்ட போலி தடுப்பூசி முகாமில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏமாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மேற்கு வங்க நடிகை மிமி சக்கரவர்த்தி. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தேர்வானவர். இவரிடம் ஒருவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு, தான் நடத்துக்கும் தடுப்பூசி முகாமுக்கு வரும்படி அழைத்துள்ளார். அதை உண்மை என்று நம்பி சென்றார், மிமி.
அதுவரை தடுப்பூசி போடாத மிமி, அங்கு முதல் டோஸை போட்டுள்ளார். அவருடன் அந்தப் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் வழக்கமாக வரும் எஸ்.எம்.எஸ் அவருக்கு வரவில்லை. பின்னர் இது போலியான முகாம் என சந்தேகம் அடைந்து, போலீசில் புகார் செய்தார்.
தன்னை ஐஏஎஸ் அதிகாரி என மிமி சக்கரவர்த்தியிடம் கூறிய டெபஞ்சன் தேவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கு போடப்பட்டது உண்மையான தடுப்பூசிதானா இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் வர சில நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மிமி சக்கரவர்த்திக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேருமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். ஆனால் மறுத்துவிட்ட மிமி, வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







