சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” திட்டம்!

சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற…

சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே காணப்பட்ட மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்த உள்நாட்டு போரின் காரணமாக ஏராளமான இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சண்டை அதிகரித்துள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து, சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சூடான் போர் நிலவரம் மற்றும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து, சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள 3,000 இந்தியர்களை மீட்க “ஆபரேசன் காவிரி” திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற ஏற்கனவே சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு கனரக ராணுவ போக்குவரத்து விமானங்களும், சூடானில் உள்ள முக்கிய துறைமுகத்தில் ஒரு கடற்படை கப்பலையும் நிறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.