ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0; கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-வின் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார், அதனைத்தொடர்ந்து, 28.03.2021 முதல்…

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-வின் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார், அதனைத்தொடர்ந்து, 28.03.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 15 நாட்களில், 1778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 2400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் பயன்படுத்திய 135 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 4334 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 312 டன் குட்கா மற்றும் 72 வாகங்கள் கைப்பற்றப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில், மூன்று கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கிக்கணக்குகள் உட்பட, நிலம், வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன, மேலும், மதுரையில், ஏழு கஞ்சா வியாபாரிகளின் 29 வங்கிக் கணக்குகளும், நான்கு நிலம், வாகனம் உட்பட்ட சொத்துக்களும் முடக்கப்பட்டன. இதேபோல, தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள், ஆறு பேரின் 8 வங்கிக் கணக்குகள், வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும் முடக்கப்பட்டன.

மேலும், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர், இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.