மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நாளை (16-11-2022) நடைதிறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்குகி டிசம்பர் 27ம் தேதி வரையுடன் நிறைவடைகிறது. பின் டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு மகரவிளக்கு பூஜை தொடங்கும். ஜனவரி 20-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். நான்கு வருடங்களுக்குப் பின்னர் பக்தர்களை முழு அளவில் வரவேற்க சபரிமலை தயாராகி வருகிறது.
கடந்த 2018 மற்றும் 2019 வருடங்களில் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 2 ஆண்டுகள் சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் 2 வருடங்களிலும் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இதன் காரணமாக கோயில் வருமானமும் குறைந்தது.
இதற்கிடையே, 4 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தமுறை மண்டல காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கம் போல அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் பக்தர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. முன்கூட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்யமுடியாத பக்தர்களுக்காக கேரளாவில் நிலக்கல் உள்பட 13 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் ஆதார் கார்டு கொண்டு வந்தால் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பக்தர்கள் எண்ணிக்கையிலும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. எனவே ஒரு நாளில் எத்தனை பக்தர்கள் வேண்டுமென்றாலும் தரிசனம் செய்யலாம். பக்தர்கள் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், செங்கனூர், கோட்டயம் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 4 வருடங்களுக்குப் பிறகு இந்த முறை புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.









