பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி விழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளியில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள், ஆலயத்தினரின் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட, முகூர்த்தக்கால் நடப்பட்டது. திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியானது திருநெடுந்தாண்டத்துடன் தொடங்கி, பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 01-ம் தேதி மோகினி அலங்காரமும், ஜனவரி 02-ம் தேதி முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இறுதியாக, வைகுண்ட ஏகாதசி விழாவானது ஜனவரி 12-ம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவுபெறுகிறது.
மேலும் நடப்பாண்டு சொர்க்கவாசல் நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அறநிலையத்துறையினர், பக்தர்களின் வசதிக்காக தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.