டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் குறிஞ்சிப்பாடி மாருதி நகர் குடியிருப்புகளில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். மேலும், ராஜா குப்பம் பகுதியில் 18 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். தொடர்ந்து ஆடுர் அகரம், பரதம்பட்டு பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து மயிலாடுதுறை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரங்கம்பாடியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, கேசவன்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கண்ணி பகுதியில் கனமழையால் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை முதலமைச்சர் பார்வையிட்டார். இதையடுத்து, அருந்தவம்புலத்தில் கன மழையால் சேதமடைந்த வீடுகளைக் கட்டுவதற்கான ஆணையை 5 நபர்களுக்கு வழங்கினார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி புடவை வேஷ்டி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதலைமைச்சர் வழங்கினார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி தாலுகாவில் உள்ள ராயநல்லூர் பகுதியல், கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.