ஆன்லைன் சூதாட்டம் தடை? – திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, ஒரு மாநிலத்தில் நடைபெறும் விவகாரம் குறித்து பதில் கூற இயலாது என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.  எதிர்க்கட்சிகளின்…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, ஒரு மாநிலத்தில் நடைபெறும் விவகாரம் குறித்து பதில் கூற இயலாது என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். 

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அவைகள், நேற்று செயல்படத் தொடங்கின. நேற்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது. இதில் அதானி விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அப்போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் இதுவரை 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அதனை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒரு மாநிலத்தில் நடைபெறும் குறிப்பிட்ட விவகாரம் குறித்து இங்கு பதில் கூற இயலாது என்று தெரிவித்தார். மேலும் 19 மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவை கொண்டு வந்துள்ளதாகவும், அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் மசோதா கொண்டுவருவது குறித்து அரசு ஆலோசிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.