அதானி குழும விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்க பங்குச் சந்தையில் அந்த குழும நிறுவனங்கள் சரிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. குறிப்பாக இன்று (பிப்ரவரி 8) அதானி குழுமத்தில் அடங்கியுள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆறுதலை அளித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தின் மத்தியில் ஒரு செய்தியும் அதில் குறிப்பிடப்பட்ட தொகையும் உலகெங்கிலும் வியப்பை ஏற்படுத்தியது. ஒரே வருடத்தில் சுமார் 13,53,000 கோடியை இழந்து சொத்து மதிப்பை இழப்பதில் புதிய கின்னஸ் சாதனையை எலான் மஸ்க் படைத்துவிட்டார் என்கிற அந்த செய்தியை மிஞ்சும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது ஜனவரி மாதத்தின் இறுதி பகுதியில் வெளியான மற்றொரு செய்தி. உலகின் 3வது பெரிய பணக்காரராக வலம் வந்த கவுதம் அதானியை உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒரு சில நாட்களில் 10வது இடத்திற்கு மேல் பின்தள்ளிய ஹிண்டன்பர்க் அறிக்கை மிகப்பெரும் பேசு பொருளாக மாறியது. பங்குச் சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் மதிப்பு ஒரே வாரத்தில் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்ததாக வெளியான தகவல்கள் பங்குச் சந்தைகள் தொடர்பாக அதிகம் அறிந்திராத சாமானியர்களிடையேகூட பேசு பொருளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த ஷார்ட் செல்லிங் முதலீட்டு நிறுவனமான ஹிண்டன் பர்க் ரிசர்ஜ், அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் முறைகேடு செய்திருப்பதாக வெளியிட்ட அறிக்கை அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பில் பேரழிவை ஏற்படுத்தியது. ஹிண்டன் பர்க் ரிசர்ஜ் நிறுவனத்தின் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது, அது இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அதானி குழுமம் விளக்கம் அளித்தும் அந்நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் தொடர்ந்து சரிந்துவந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் பெரும் புயலைக் கிளப்பியது. அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்தும், பொதுத்துறை வங்கிகள் அந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள கடன்கள் உள்ளிட்டவை குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.
இப்படி சர்ச்சைகள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க இந்த சலசலப்புகளுக்கிடையே அதானி குழுமத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் பங்குசந்தை சரிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. கடந்த ஜனவரி 25ந்தேதியிலிருந்து தொடர்ந்து கரடியின் பிடியில் சிக்கித்தவித்த அதானி குழும நிறுவன பங்குகள் கடந்த சில நாட்களாக காளையின் அரவணைப்பிற்கு வந்துள்ளன. குறிப்பாக இன்றைய தினம் பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தில் உள்ள 6 நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் நாளாக அமைந்துள்ளன.
குறிப்பாக அதானி குழுமத்தில் உள்ள முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசசின் சந்தை மதிப்பு முந்தைய நாளை ஒப்பிடும்போது இன்று ஒரே நாளில் 23.13 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை நேற்றைய வர்த்தக நேர முடிவில் 1802.95 ஆக இருந்த நிலையில் அது இன்றைய வர்த்தக நேர முடிவில் 2,220ஆக இருந்தது. அதாவது அதானி எண்டர்பிரைசசின் ஒரு பங்கு விலை ஒரே நாளில் ரூ.417.05 உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வர்த்தக நேர இறுதி நிலவரத்தை ஒப்பிடுகையில் கடந்த 2 நாட்களில் 40 சதவீதம் அளவிற்கு அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளன.
இதே போல் அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் நிறுவன பங்குகளின் விலை 9 சதவீதம் அளவிற்கு இன்று ஏற்றம் கண்டுள்ளன. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்குகள் 4.99 சதவீதமும், அதானி டிரான்ஸ்மிசன் பங்குகள் 5 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளன. அதானி பவரின் பங்குகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் 4.99 சதவீதம் உயர்ந்துள்ளது. சமீபத்தில் அதானி குழும நிறுவனங்களில் ஒன்றாக ஐக்கியமான என்டிடிவியின் பங்குகளும் இன்று ஏற்றம் கண்டுள்ளன. அந்த நிறுவன பங்குகள் இன்று 4.98 சதவீதம் அளவிற்கு அதிகரித்தது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளும், அதானி டோட்டல் கேஸ் பங்குகளும் முந்தைய நாளை ஒப்பிடும்போது தலா 5 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி குழுமத்தில் அடங்கியுள்ள ஏசிசி நிறுவனத்தின் பங்குகளும், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் லேசான சரிவை சந்தித்துள்ளன. ஏசிசி நிறுவனத்தின் பங்குகள் 0.96 சதவீதம் அளவிற்கும், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.078 சதவீதம் அளவிற்கும் இன்று சரிவைக் கண்டுள்ளன.
மொத்தத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் பங்குகள் இன்று கணிசமான ஏற்றத்தைக் கண்டுள்ளன. ஹிண்டன்பர்க் ரிசர்ஜ் அறிக்கை உள்நோக்கம் கொண்டது என நீண்ட அறிக்கை வெளியிட்ட அதானி குமுழும், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒருகட்டமாக தங்களது நிறுவன பங்குகளை அடமானமாக வைத்து வாங்கிய கடனில் சுமார் 9,203 கோடி ரூபாயை முன்கூட்டியே திருப்பி செலுத்தியுள்ளது அதானி குழுமம். மேலும் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் கால்பாகத்தில் அதானி வில்மர் போன்ற அதானி குழும நிறுவனங்கள் சிலவற்றின் வருவாய் அதிகரித்ததும் அதானி நிறுவன பங்குகள் சரிவிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. அதானி குழும நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து எப்படி இருக்கும் என்பதற்கு அடுத்தடுத்து வரும் நாட்கள்தான் பதில் சொல்லும்.
-எஸ்.இலட்சுமணன்