ஆன்லைன் தேர்வில் மோசடி; சென்னை பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை

ஆன்லைன் தேர்வில் மோசடி செய்து , பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தாலால் கடந்த ஆண்டு முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு…

ஆன்லைன் தேர்வில் மோசடி செய்து , பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தாலால் கடந்த ஆண்டு முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதேபோல், தேர்வும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பல வருடங்களுக்கு முன்னர் கல்லூரி முடித்தும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்காக சிறப்பு தேர்வை பல்கலைக்கழகங்கள் அறிவித்தது. அந்த வகையில் 1980-81 ஆம் கல்வியாண்டு முதல் தற்போது வரை அரியர் வைத்துள்ள மாணவர்கள், சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெற்றன. இதில் போலி தேர்வர்கள் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம் விசாரணை மேற்கொண்டதில், கல்விக்கட்டணம்,தேர்வு கட்டணம் எதுவும் செலுத்தாமல் 117 பேர் தேர்வு எழுதியது தெரிய வந்தது. இதனையடுத்து போலியாக பட்டம் பெற முயன்றவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், வேறு யாரேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை ஆராய விசாரணைக் குழு அமைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார். மேலும், தொலைதூரக் கல்வி மையங்களை நடத்துவோர் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியாக சான்றிதழ்கள் பெற்றுத்தர முயற்சித்ததாக சென்னைப் பல்கலைக்கழகம் குற்றச்சாட்டையும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.