மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த முன்பதிவு வரும் 12 -ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பண்பாடு சார்ந்து நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை யாரும் இனி நடத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவது மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு, மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து ஜல்லிக்கட்டுபோட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16 -ல் பாலமேட்டிலும் மற்றும்17ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன் பதிவு இன்று தொடங்கி,12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், madurai.nic.in எனும் இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாடுபிடி வீரர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் என்றும், காளைகள் 3-ல் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.








