டெஸ்லா நிறுவனத்தின் சீன பிரிவின் தலைவராக இருந்த டாம் ஜூ-வுக்கு பதவி உயர்வு வழங்கி அமெரிக்க, ஐரோப்பிய பிரிவுகளின் தலைவராக அந்நிறுவனம் நியமித்துள்ளது. எலான் மஸ்க்குக்கு அடுத்து டெஸ்லாவின் நம்பர் 2 இடம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த டாம் ஜூ?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சீனாவில் பிறந்த டாம் ஜூ, நியூசிலாந்த பாஸ்போர்ட்டை வைத்துள்ளார். தனது இளங்கலை படிப்பை ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். டியூக் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசகராக பணியாற்றினார்.
2014-ம் ஆண்டு புராஜெக்ட் மேனஜராக டெஸ்லா நிறுவனத்தில் இணைந்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் சார்ஜர் நெட்வொர்க் உருவாக்குவதில் தீவிரமாக பணியாற்றினார். பின்னர் இவரது திறமையை டெஸ்லா நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொண்டு பதவி உயர்வை தொடர்ச்சியாக வழங்கியது. நிறுவனத்துக்குள் சேந்த ஒரு ஆண்டில் சீன செயல்பாட்டு பிரிவுக்கு மேனஜராக பதவி உயர்வை பெற்றார்.
சீனாவில் ஒரு ஆண்டுக்குள் டெஸ்லா காரை தயாரித்து விற்பனையை அதிகப்படுத்தினார். பின்பு ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டு தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விற்பனையை அதிகப்படுத்தினார்.
கோவிட் சமயத்தில் சீனாவில் மட்டும் டெஸ்லா கார் உற்பத்தி தடைபடவில்லை. இதன்மூலம் எலான் மஸ்கின் நம்பிக்கைக்குரியவராக டாம் ஜூ உருவானார். தற்போது அவருக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் உற்பத்தி பிரிவு, தென் அமெரிக்காவின் விற்பனை பிரிவு, ஐரோப்பாவின் விற்பனை பிரிவு ஆகியவற்றுக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எலான் மஸ்க்குக்கு பிறகு டெஸ்லா நிறுவனத்தின் நம்பர் 2-வாக டாம் ஜூ உருவாகி வருகிறார்.