நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால், மற்ற மொழி படங்கள் தமிழகத்தில் வெளியாவதில் பிரச்னை ஏற்படும் என இயக்குனர்கள் லிங்குசாமி, பேரரசு ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில்,
இயக்குனர் வேலுதாஸ் இயக்கி நடிகர்கள் விமல், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள
’துடிக்கும் கரங்கள்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றுது. இந்த விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, பேரரசு, எழில் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
’துடிக்கும் கரங்கள்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் லிங்குசாமி, “இந்த காலம் சினிமாவின் பொற்காலம். பல காலகட்டங்களாக பேன் இந்தியா என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் பல்வேறு படங்கள் வெளி வந்துள்ளன. இங்கு திரையிடப்படும் படத்தை எங்கோ ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து ரசிகர்கள் ஓ.டி.டி.யில் பார்க்கின்றனர். முக்கியமான காலகட்டத்தில் இது போன்ற பிரச்னை வரவே கூடாது. தமிழ் படத்தை ரிலீஸ் பண்ண கூடாது என்று சொன்னால், அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அது பிரச்னையாகும்.
மிகத் தரமான ஆட்கள் இரண்டு இடங்களிலும் உள்ளனர். அவர்கள் பேசி இதற்கு சுகமான முடிவை எடுக்க வேண்டும். ராஜமவுலி எடுக்கும் பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் தமிழகத்தில் பெரிதாக போகிறது. தமிழகத்தில் எடுக்கும் படங்கள் அங்கு பெரும் ஹிட் ஆகிறது. சங்கர் அவர்களின் திரைப்படம் எத்தனையோ படங்கள் ஆந்திராவில் வெளிவந்துள்ளது. குறுகிய எண்ணத்தோடு யாராவது நினைத்திருந்தார்கள் என்றால் அந்த நினைப்பை உடனே மாற்ற வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி அதை மாற்றவில்லை என்றால் வாரிசுக்கு முன்னும் பின்னும் என்று சினிமா மாறிவிடும். எனவே எல்லாரும் தலையிட்டு படத்தை வெளியிட வேண்டும். இது சின்ன ஒரு சலசலப்பு. கூடிய விரைவில் விலகிவிடும். விலகவில்லை என்றால் அதை விலக்குவதற்கான அனைத்து விஷயங்களையும் நாங்கள் நின்று செய்வோம்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பேரரசு, “ஜனவரி 14 தமிழகத்தில் பொங்கல் பண்டிகை. அங்கு சங்கராந்தி. இங்கு வாரிசு ரிலீஸ் ஆகிறது. அதே நேரத்தில் ஆந்திராவில் தெலுங்கு படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் தயாரிப்பாளர் தெலுங்கு, இயக்குனரும் தெலுங்கு ஹீரோ மட்டும் தான் தமிழ். தமிழ் ஹீரோவை வைத்து தான் அவர்கள் கார்னர் செய்கிறார்கள். தமிழ் திரையுலகினரும், தமிழர்களும் பெருமைக்குரியவர்கள். பெருந்தன்மை படைத்தவர்கள். பாகுபலி வந்துள்ளது. ட்ரிபிள் ஆர் வந்துள்ளது. காந்தாரா வந்துள்ளது. கேஜிஎஃப் வந்துள்ளது. அதை அனைத்தும் தூக்கி வைத்துக் கொண்டாடினோம்.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு பீஸ்டுடன், கேஜிஎஃப் வெளியானது. அந்தப் படத்தையும் தமிழர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ரசிகர்கள் புகழ்ந்தனர். தமிழ் டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழ் திரையுலகம் பெருந்தன்மையோடு எல்லா மொழி படங்களையும் வேறுபாடு இல்லாமல் பார்க்கிறது. சங்கராந்தி அன்று தெலுங்கு படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். வாரிசை தள்ளி போடுங்க என்று சொல்வது நம்மை அவமானப்படுத்துவது போல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் அனைத்து மொழிகளையும் ஒன்றாக பார்க்கிறார்கள். நீங்கள் ஏன்
தமிழ் மொழி என்று பிரித்துப் பார்க்கிறீர்கள். தமிழ் உணர்வை அவர்கள் தூண்டுகின்றனர். திராவிடம் திராவிடம் என்று தமிழர்கள்தான் கத்திக் கொண்டு உள்ளனர். தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகளை திராவிடம் என்று சகோதரர்களாக பார்க்கிறோம். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் திராவிடம் என்ற வார்த்தை இல்லை. தமிழனை திராவிடனாக பார்ப்பதில்லை. தமிழனாகத்தான் பார்க்கிறார்கள். அதற்கான ஒரு உதாரணம் தான் இது.
இது ஒரு சாதாரண பிரச்னையாக நாம் கடந்து செல்ல முடியாது. தமிழர்களுக்கு இது ஒரு மானப் பிரச்னை. வாரிசு, ஆந்திராவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் தெலுங்கு, கர்நாடக மலையாள, படங்கள் இங்கு ரிலீசாகாத அளவிற்கு பிரச்னைகள் பெரிதாக வாய்ப்புள்ளது. இது ரோஷத்தையும் உணர்வையும் தூண்டும் விஷயமாக உள்ளது” என்று ஆவேசமாக பேசினார்.







