நாடு முழுவதும் ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம், சூரஜ்கண்ட்டில் (Surajkund) மாநில உள்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, உள்நாட்டு பாதுகாப்பில் அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பு தான் என்றாலும், உள்நாட்டுப் பாதுகாப்பில் அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு செயல்படவேண்டியது அவசியம் என்றார். இது, அரசியல் சாசன கடமை மட்டுமின்றி தேசத்துக்கு ஆற்ற வேண்டிய பொறுப்பு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தவறான தகவல்கள் பகிரப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர், தகவல்களை சரிபார்த்து பகிர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன்; ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு போலவே ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற யோசனையை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சீருடை இருப்பதைக் குறிப்பிட்டார். இதனைக் களைந்து, அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து ஒரே சீருடை திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றார். தற்போது வரை பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும் காக்கி உடையே மாநிலங்களில் பல்வேறு விதமாக சீறுடையாக அணியப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் தடுப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.