இந்தியாவில் பிறக்கும் 36 பச்சிளங் குழந்தைகளில் ஒன்று முதலாவது பிறந்த நாளுக்குள் இறந்துவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியப் பதிவாளர் வெளியிட்ட புதிய ரிப்போர்ட்டில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ரிப்போர்ட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2020இல் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளில் 28 குழந்தைகள் ஒரே ஆண்டுக்குள் இறந்து விட்டன. கடந்த 1971ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 129ஆக இருந்தது. முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவு என்றாலும் இன்னும் முழுமையாக உயிரிழப்புகள் முடிவுக்கு வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 36 சதவீத உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

ஊரகப் பகுதிகளில் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் 48 இல் இருந்து 31ஆகவும், நகர்ப்புறங்களில் 29 இல் 19-ஆகவும் குறைந்துள்ளது. 2020இல் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 43 பச்சிளங் குழந்தைகளும், குறைந்தபட்சமாக மிஸோரமில் 3 பச்சிளங் குழந்தைகளும் உயிரிழந்தன.
பிறப்பு விகிதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த 2020இல் 19.5 சதவீதம் மட்டுமே இருந்தது. 1971இல் 36.9 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மணிகண்டன்







