உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹபூர் மாவட்டத்தில் ரசாயனத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஹபூர் மாவட்ட காவல் துறை ஐஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பிரிவில் இருந்த பாய்லர் வெடித்துச் சிதறியது. தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படை வீரர்களுடன் விரைந்து வந்தோம். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
உ.பி. முதலமைச்சர் இரங்கல்
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார்.
மேலும், மீட்பு நடவடிக்கைகளை கவனிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, குஜராத் மாநிலம் வதோதராவில் ரசாயன தொழிற்சாலையில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிற்சாலையே எரிந்து பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாதுகாப்பு விதிகள் உரிய முறையில் பின்பற்றப்படாமல் இருப்பதாலே இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
-மணிகண்டன்








