பாதுகாப்புத் துறையில் இந்தியா – இஸ்ரேல் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் தொலைநோக்கு அறிக்கையை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்தியா – இஸ்ரேல் இடையேயான தூதரக உறவு தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென்ஜமின் கன்ஸ், டெல்லியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை உறுதிப்படுத்தும் தொலைநோக்கு அறிக்கை வெளியிடப்பட்டது.
ராஜ்நாத் சிங்கும், பென்ஜமின் கன்சும் இணைந்து இந்த தொலைநோக்கு அறிக்கையை வெளியிட்டனர்.
இதனையடுத்து கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், வரும் காலங்களில் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து எவ்வாறு பயணிக்கப் போகின்றன என்பதை வரையறுக்கும் தொலைநோக்கு அறிக்கையை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.









