மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறுவேற்றுவேன் என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி.…

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறுவேற்றுவேன் என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தீவிர சிவ பக்தனான இவர் நேற்று முன்தினம் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைபிரலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இதனையும் படியுங்கள் : மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்?

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் வீட்டில் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தெரிவித்ததாவது..

”நானும் மயில்சாமியும் அடிக்கடி சந்திப்போம். அந்த சந்திப்பில் சினிமாவை பற்றி பேசவே மாட்டார். நான் சினிமா குறித்து கேட்டாலும் அவர் பேச மாட்டார். எம் ஜி ஆர் பற்றியும் சிவன் பற்றியும் தான் அவர் பேசுவார். நாங்கள் இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக படங்களில் நடிக்கவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

இதனையும் படியுங்கள் : ஏழ்மையிலும் ஏழ்மையை போக்க உதவிய மயில்சாமி

திருவண்ணாமலை நடைபெரும் கார்த்திகை தீபத்தில் மக்கள்  கூட்டத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக என்னிடம் பேசுவார். சிவ ராத்தரி அன்று அவர் காலமானது தற்செயல் இல்லை. சிவனுடைய கணக்கு அவரது பக்தனை அவர் அழைத்து கொண்டார். மயில்சாமி இறுதியாக சென்ற கோயிலில் பால் அபிஷேகம் செய்வேன். மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நடிகர் பிரபு மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் :

மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு கூறியதாவது..
” நடிகர் மயில்சாமி நல்ல உள்ளம் கொண்டவர், யார் உதவி கேட்டாலும் முன் நின்று செய்து கொடுப்பவர், மயில்சாமி இருக்கக்கூடிய இடம் என்றும் கலகலவென இருக்கும். மயில்சாமி எல்லோரது உள்ளத்திலும் நிறைந்திருப்பவர், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நாம் இல்லாத போது எத்தனை பேர் வருகிறார் என்பது தான் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு அர்த்தம்.” என நடிகர் பிரபு தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.