”நிறைய நாள் உயிரோடு இருக்கணும் என்கிற ஆசை எனக்கு இல்லை ஆனால் இருக்கும் வரை உதவி செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது” எம்.ஜி.ஆர் நடித்த சிரித்துவாழ வேண்டும் திரைப்படத்தின் மறுவெளியீடுக்கான டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் மயில்சாமி பேசிய வார்த்தைகள் இது. தான் பேசிய வார்த்தைகளை கடைசிவரை காப்பாற்றிச் சென்றிருக்கிறார் அவர்.
மயில்சாமியின் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம், ஒன்று அவரது திரையுலக வாழ்க்கை மற்றொன்று அவரது சமூக தொண்டுகள். அவர் ஒன்றும் பல கோடிகளை ஊதியங்களாக பெறும் உச்ச நட்சத்திரமாக வாழ்ந்தவர் அல்ல, தன்னுடைய எளிமையான வாழ்க்கையிலும் பிறரின் ஏழ்மையை போக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்திருக்கிறார் மயில்சாமி.
இந்த உலகிலேயே தனக்கு கிடைத்த பெரிய பெருமை எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருப்பதும், அவரது பக்தனாக வாழ்வதும்தான் என கூறும் அளவிற்கு அவர் மீது அலாதியான அன்பு வைத்திருந்தவர் மயில்சாமி. அதற்கு எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை ரசித்தது ஒரு காரணமாக இருந்தாலும், அதையும் தாண்டி எம்.ஜி.ஆரின் கொடை உள்ளத்தை வெகுவாக ரசித்தவர் மயில்சாமி. பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எம்.ஜி.ஆர் படங்களையும், அவரது வாழ்க்கையையும் பார்த்துதான் மயில்சாமியிடம் துளிர்விட்டிருக்கிறது.
மயில்சாமி பற்றி கருத்து தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள் அவரது உதவும் குணம் குறித்து கூறத்தவறுவதில்லை. அதில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி பற்றி கூறிய வார்த்தைகள் மறக்க முடியதாவை. மயில்சாமியின் கொடை உள்ளம் குறித்து சிரிக்க சிரிக்க பேசி நெகிழ வைத்தார் விவேக். மயில்சாமி தயாரித்த காசு மேல காசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அது. நிகழ்ச்சியில் பேசிய விவேக், நல்லவன் வாழ்வான் என தான் கட்டிய வீட்டிற்கு மயில்சாமி பெயர் வைத்த விதத்தையே நெகிழ்ச்சியோடு பாராட்டினார். ”ஒரு நாள் பணக்காரனாக இருப்பார் மறுநாள் பிச்சைக்காரனாக இருப்பார். அதற்கு காரணம் கையில் கிடைப்பதையெல்லாம் கஷ்டப்படுகிறவர்களுக்கு பிரித்துகொடுத்துவார்” என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசி மயில்சாமியின் உதவும் குணத்தை எடுத்துரைத்தார் விவேக். சுனாமியால் பாதிக்கப்பட்ட தேவனாம்பட்டு கிராமத்திற்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் உதவிய விதத்தை பார்த்து வியந்த மயில்சாமி, நேராக அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று தான் அணிந்திருந்த எம்.ஜி.ஆர் டாலர் போட்ட செயினை அவரது கழுத்தில் அணிவித்து வந்த நிகழ்வையும் கலகலப்பாக நடிகர் விவேக் நினைவு கூர்ந்தார்.
ஏழ்மையிலும் உதவும், மயில்சாமியின் உதவும் குணத்திற்கு உதாரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் ஒரு நிகழ்வு அரங்கேறியது. புத்தாண்டு கொண்டாடத்தை முன்னிட்டு சென்னையில் ஓட்டல் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு நடிகர் விவேக்கும், மயில்சாமியும் சென்றிருக்கின்றனர். அப்போது ஒவ்வொரு பாட்டிற்கும் இசைக் கலைஞர்களுக்கு தனது கையிலிருந்த பணத்தை அன்பளிப்பாக அள்ளி வழங்கியிருக்கிறார் மயில்சாமி. இறுதியில் நிகழ்ச்சி முடிந்ததும் விவேக்கிடம் விடைபெற்று சென்ற மயில்சாமி, 2 நிமிடத்திலேயே விவேக்கை நோக்கி திரும்பி வந்திருக்கிறார். ”சார் தப்பா நெனச்சிக்கிடாதீங்க ஆட்டோவுக்கு கொடுக்க ஒரு 50 ரூபா இருக்குமா” என அப்போது மயில்சாமி கூறியதை நினைவு கூர்ந்த விவேக், அதுதான் மயில்சாமி என காசு மேல் காசு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறிய வார்த்தைகள் இன்று அவரைப் பற்றிய நினைவுகளில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
திரையுலக பிரபலங்களுக்கு போன்செய்து மயில்சாமி அவ்வப்போது அன்பு தொல்லை கொடுப்பது வழக்கம். ஆனால் அது தனக்காக அல்ல, பிறருக்காக. பிரபல நட்சத்திரங்களிடம் பண உதவி பெற்று அதனை ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் அவதி அடையும் மாணவர்கள், நோய் நொடியால் பரிதவிக்கும் ஏழைகள் என உதவி செய்வது மயில்சாமியின் வாடிக்கை.
”உதவி செய்வதற்கு பதவி தேவையில்லை, பணம் தேவையில்லை நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்திருக்கிறார் மயில்சாமி, ஒரு நல்ல மனிதாக வாழ்வது எப்படி என்பதற்கு அவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைந்திருக்கிறது” எ்ன்று இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், மயில்சாமி பற்றி கூறிய வார்த்தைகளை ஆமோதிப்பது போலவே பல திரையுலக பிரபலங்களும் மயில்சாமியுடன் பழகிய நண்பர்களும் நெகிழ்ச்சியோடு கூறிவருகின்றனர். ”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்…இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்…” என்கிற எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகள்தான் அவரை ஆதர்ஷ் நாயகனாக கொண்டு வாழ்ந்த நடிகர் மயில்சாமி மறைந்திருக்கும் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.
-எஸ்.இலட்சுமணன்







