மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்?

புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணிஜெயராம் மறைந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தமிழ் திரையுலகம்  மற்றொரு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.  துணை நடிகராக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக என நடிப்புத்துறையில் பல பரிணாமங்களை காட்டி ரசிகர்களை மகிழ்வித்த…

புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணிஜெயராம் மறைந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தமிழ் திரையுலகம்  மற்றொரு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.  துணை நடிகராக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக என நடிப்புத்துறையில் பல பரிணாமங்களை காட்டி ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் மயில்சாமி தனது 57வது வயதிலேயே மாரடைப்பால் காலமாகியிருக்கிறார். இன்று அதிகாலைவரை அவரை கலகலப்பாக பார்த்தவர்கள் அந்த அதிகாலை முடிவதற்குள்ளேயே அவரது உயிரும் முடிந்துவிட்டது என்கிற செய்தியை நம்ப முடியாமல் சோகத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் ராமசாமி என்பவரின் மகனாக கடந்த 1965ம் ஆண்டு பிறந்தார் மயில்சாமி. தமிழகத்தில் மிமிக்ரி என்கிற வார்த்தை பிரபலமாவதற்கு அஸ்திவாரம் போட்டவர் மயில்சாமி என்றால் அது மிகையாகாது. அந்த பலகுரல் கலை மூலமே இவர் பிரபலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பல திரை நட்சத்திரங்களின் வாய்சில் ஒருவரே பேசுவது அப்போது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மயில்சாமியின் மிமிக்ரி கேசட்டுகள் 80களில் மிகவும் பிரபலமாக இருந்தது. மேடை நிகழ்ச்சிகளிலும் இவரது மிமிக்ரி கைத்தட்டல்களை குவித்தது.

சினிமாவை பொறுத்தவரை அவருக்கு முதலில் கிடைத்தது துணை நடிகர் வேடங்கள்தான். 1984ம் ஆண்டு வெளிவந்த கே.பாக்கியராஜ் இயக்கிய தாவணிக் கனவுகளில் ஒரு சிறிய வசனம் பேசி தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் மயில்சாமி. அந்த படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரம் கள்ளக்கடத்தலில்  ஈடுபடும் முடிவை மாற்றி அவரை திருத்தும் வசனத்தை பேசும் கூட்டத்தில் ஒருவராக  படத்தில் நடித்தார்.

1985ம் ஆண்டு வெளிவந்த, பாக்கியராஜின் சிஷ்யர் பாண்டியராஜன் இயக்கிய கன்னிராசி படத்திலும் மயில்சாமிக்கு ஒரே சீன்தான். எனினும் அந்த காட்சியில் அவர் தனித்து தெரிந்தார். மளிகைக்கடையில் வேலை செய்யும் பையனாக அந்த படத்தில் தோன்றும் மயில்சாமி, கவுண்டமணியை கலாய்ப்பது போல் வசனம் பேசுவார். இந்த காட்சி திரையுலகில் மயில்சாமிக்கு ஓரளவிற்கு அடையாளத்தைக் கொடுத்தது.

தொடர்ந்து 1988ம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் அபூர்வசகோதரர்கள் படம்தான் மயில்சாமிக்கு திரையுலகில் ஒரு திருப்பத்தைக்  கொடுத்தது. அந்த படத்தில் கமலுக்கு நண்பராக பல காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். தொடர்ந்து வெற்றிவிழா, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட கமல்ஹாசன் படங்களிலும், பணக்காரன், உழைப்பாளி உள்ளிட்ட ரஜினி படங்களிலும் அடுத்தடுத்து நடித்து திரையுலகில் பிசியானார் மயில்சாமி. குறிப்பாக உழைப்பாளி படத்தில் வரும் காமெடி காட்சிகளில் அதிக கவனம் பெற்றார்.

இப்படி சிறுசிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த மயில்சாமியை வடிவேலு மற்றும் விவேக்குடன் நடித்த டிராக் காமெடிக் காட்சிகள் மிகவும் பிரபலமாக்கி அவரை தமிழ் திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக்கியது. குறிப்பாக பாளையத்து அம்மன் படத்தில் டான்ஸ் சாமியாராக நடிகர் விவேக்குடன் மயில்சாமி நடித்த காட்சி அவரை பட்டிதொட்டியெங்கும் பாப்புலராக்கியது.

தலைநகரம் படத்தில் வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சிகள் தமிழ் சினிமா நகைச்சுவையின் கிளாசிக் ஹிட்ஸ்களில் ஒன்று.  அந்த படத்தில் நாய் சேகராக  வரும் வடிவேலுவிடம் பாஸ் என அழைத்து அறிமுகமாகி,  உங்க முகத்துல 3 எம்.ஜி.ஆர், 6 சிவாஜி, 9 ரஜினிகாந்த், 12 கமலஹாசன் தெரியுறாங்க என உசுப்பேத்தி மயில்சாமி செய்யும் அலப்பறைகள் அவர் திரையுலகில் இன்னொரு ரவுண்ட் வருவதற்கு அஸ்திவாரம் போட்டது. நடிகர் தனுஷ் உடன் நடித்த உத்தமபுத்திரன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களின் காமெடிகளும் மயில்சாமியின் ஹிட் லிஸ்டில் அடங்கும். விஜய், அஜித்துடனும் பல படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் மயில்சாமி.

காமெடிக் காட்சிகளிலேயே நடித்துக்கொண்டிருந்த மயில்சாமி,  ஒரு கட்டத்தில் கதையோடு அங்கம் வகிக்கும் முக்கிய குணச்சித்திர வேடங்களிலும் தனது திறமையை நிரூபித்தார். குறிப்பாக மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஒரு மாறுபட்ட மயில்சாமியை வெளிப்படுத்தியிருப்பார். உதயநிதி ஸ்டாலினுடன் நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் மயில்சாமி.

திரையுலக பயணம் ஒருபுறம் இருந்தாலும் தனது டிவி நிகழ்ச்சிகளையும், மேடை நிகழ்ச்சிகளையும் தனி டிராக்கில் தொடர்ந்து அதிலும் முத்திரை பதித்தார். சன்டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காமெடி டைம் மிகவும் பிரபலமானது. அந்த தொலைக்காட்சியில் வெளிவந்த அசத்தப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக வந்து கவனம் ஈர்த்தார் மயில்சாமி.

சமூக தொண்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்த மயில்சாமி, பிற நடிகர்களால் வள்ளல் என புகழப்படும் அளவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்துவந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். சமூகத் தொண்டுகளில் மயில்சாமி காட்டிய ஆர்வம் அவரை அரசியல் கருத்துக்களையும் துணிச்சலாக பேச வைத்தது.

முன்னணி நடிகர்களே அரசியல் விஷயங்களில் கருத்துக்களை சொல்ல தயங்கிய நேரத்தில் ஒரு நடுநிலையாளராக டி.வி விவாதங்களில் கலந்துகொண்டு தனது மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசினார் மயில்சாமி. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாராமல் தனக்கு தவறு என தோன்றும் அரசியல் நடவடிக்கைளை துணிச்சலாக அவர் விமர்சித்தார்.

மயில்சாமிக்கு ஆன்மீகத்திலும் அளப்பரிய ஈடுபாடு உண்டு. சிவனின் தீவிர பக்தரான அவர்,  திருவண்ணமலைக்கு அடிக்கடிக் செல்வதுடன், திரையுலக பிரபலங்கள் பலரையும் அங்கு கூட்டிச் சென்று தனது ஆன்மீக அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வார். பாடகர் எஸ்.பி.பியை  திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பாட வைத்ததும் மயில்சாமிதான். இப்படி தீவிர சிவபக்தராக வாழ்ந்த மயில்சாமியின் உயிர் சிவராத்திரி அன்றே சிவனடி சேர்ந்திருப்பதாக மயில்சாமியின் நண்பர்கள் நெகிழ்கிறார்கள்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மயில்சாமியின் உயிர் அந்த சிவராத்திரி முடிவ்தற்குள்ளேயே பிரிந்துள்ளது.  மேகநாதேஸ்வரர் ஆலய சிவராத்திரி வழிபாட்டில் மயில்சாமியுடன் அவரது நெருங்கிய நண்பர் சிவமணியும் கலந்துகொண்டு டிரம்ஸ் வாசித்தார். அப்போது மயில்சாமி தன்னிடம் பகிர்ந்துகொண்ட  ஆசை ஒன்றை சிவமணி ஊடகங்களிடம் தெரியப்படுத்தினார்.

”அண்ணே எனக்கு ஒரு ஆசை…இந்த கோவிலுக்கு ரஜினி சாரை கூட்டி வந்து சிவலிங்கத்திற்கு அவர் பால் ஊற்றுவதை நான் பார்க்கணும்ன” என்று மயில்சாமி தன்னிடம் கூறியதாக சிவமணி தெரிவித்தார்.

மயில்சாமியின் அந்த கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்? 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.