முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அமைச்சர்கள் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் மே 23 ஆம் தேதி ஜப்பன், சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்கு ஏற்ற வகையில் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடாக இந்த பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளார். உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு நிறுவனங்களை அழைக்கும் விதமாக பல்வேறு நாடுகளில் முதலீட்டாளர்கள், நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மே மாதம், தமிழகத்தின் முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேது துபாய், அபுதாபி போன்ற ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு, தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த பயணத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்துறையின் உயர் அலுவலர்கள் தொடர் வெளிநாடு பயணங்களை மேற்கொள்கின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









