டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டி 49 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில், 84 மற்றும் 87 கிலோ எடையை தூக்கி பதக்கத்தை தட்டிச்சென்றார். சானுவுக்கு மணிப்பூர் காவல் துறையில் கூடுதல் எஸ்.பி (விளையாட்டு) பதவி வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நாடு திரும்பிய மீராபாய் சானுவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பளுதூக்கும் போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹோ ஜிஹூ தங்கப்பதக்கம் வென்றிருந்தார். தற்போது அவர் மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட இருப்பதாகவும், இதனால் அவர் டோக்கியோவிலேயே தங்கியிருக்கவும் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. சீன வீராங்கனை ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால் மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.







