ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் தகவல்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்…

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  அப்பல்லோ தொடர்ந்த வழக்கில் ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், “ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவிட்டு வருகிறோம். ஆகவே, விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியது.

ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில்,  “90 சதவீதம் விசாரணை நிறைவடைந்துவிட்டது. தடையை நீக்கி விசாரணையை தொடரவும் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அனுமதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள்,  “விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவும், அப்பல்லோ மருத்துவமனையின் மேல்முறையீட்டு மனுவும் இணைத்து 4 வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.