ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ யார் தெரியுமா?


சி.பிரபாகரன்

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 1,000 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அதில் இந்தியாவின் பங்கு 1900-களில் தான் தொடங்குகிறது. அதிலும் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றவர் ஒரு இந்தியர் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொல்கத்தாவில் பிறந்த பிரிட்டிஷ் வம்சாவளியான விளையாட்டு வீரர் நார்மன் பிரிட்சார்ட் தான், ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியராவார். 1900-ல் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நார்மன் பிரிட்சார்ட், ஐந்து போட்டிகளில் பங்கேற்று, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 200 மீட்டர் தடை தாண்டுதல் ஆகிய 2 போட்டிகளில், வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரிட்சார்ட் இந்தியாவிலிருந்து சென்று 2 பதக்கங்களை வென்றாலும், அவர் சுயாதீன தனிநபர் வீரராகவே பங்கேற்றாரே தவிர, இந்தியப் பிரதிநிதியாக பங்கேற்கவில்லை. அதன்பின்னர், 19 வருடங்களுக்குப் பிறகு, 1919-ல் பிரிட்டிஷாரால் புனேவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான கூட்டத்தில் பேசிய சர் டோரப்ஜி டாடா, பிரிட்டிஷ் ஒலிம்பிக் கமிட்டியின் மூலம் 1920 ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்க பிரதிநிதித்துவத்தைப் பெறுமாறு, அப்போதைய பம்பாய் ஆளுநர் லாயிட் ஜார்ஜிடம் விருப்பம் தெரிவித்தார். இதன் விளைவாக, 1920-ல், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவை இணைத்துக் கொண்டது.

1920, 1924 என இரு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பிறகு, 1928-ல் தான் இந்தியா தனது முதல் பதக்கமான தங்கப்பதக்கத்தை வென்றது. 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி, நெதர்லாந்து அணியை 3-க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் ஒலிம்பிக் பதக்கமான தங்கப் பதக்கத்தைப் பெற்றது.

பிரிட்சார்ட் 2 பதக்கங்கள் வென்றிருந்தாலும், ஹாக்கி அணி வென்றதே இந்தியாவின் பிரதிநிதித்துவத்தால் கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கமாக பலராலும் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 1928 முதல், சுதந்திரத்திற்குப் பிறகு 1980 வரை, சுமார் 52 வருடங்கள் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இந்த 52 ஆண்டுகளில், 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கத்தையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் அரசனாக இந்திய அணி திகழ்ந்தது.

1932-ம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், இந்திய அணி அமெரிக்காவை 24-க்கு 1 என்ற கணக்கில் தோற்கடித்ததுதான், ஒலிம்பிக் ஹாக்கி போட்டி வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த பதக்கங்கள் அனைத்தும் ஒரு அணிக்கானதாக இருக்க, 1952 ஒலிம்பிக்கில், முதல் தனிநபர் பதக்கத்தை மல்யுத்த வீரர் கே.டி.ஜாதவ் வென்றார்.

1980-க்கு பிறகு பதக்கங்கள் ஏதும் வெல்லாத இந்தியா, கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து, 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் லியாண்டர் பயஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 1952-ல் பதக்கம் வென்ற ஜாதவிற்கு பிறகு, இந்தியாவிற்கு கிடைத்த தனிநபர் பதக்கம் இது தான்.

2000 சிட்னி ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி, முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அதன் பின், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில், 10 மீட்டர் ஏர் ரைஃபில் சுடுதல் போட்டியில், தங்கம் வென்ற அபிநவ் பிந்தாரா, ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதே ஒலிம்பிக்கில், குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர் சிங் வெண்கலப் பதக்கத்தையும், சுஷில் குமார் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

2012 ஒலிம்பிக்கில், 6 பதக்கங்களை தன்வசப்படுத்தியது இந்தியா. பிஸ்டல் சுடுதல் போட்டியில் விஜய் குமார் வெள்ளிப்பதக்கம், 66 கிலோ மல்யுத்தப் போட்டியில் சுஷில் குமார் வெள்ளிப் பதக்கம், ஏர் ரைஃபில் சுடுதல் போட்டியில் ககன் நரங் வெண்கலப் பதக்கம், பெண்கள் இறகுப்பந்து போட்டியில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம், பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் வெண்கலப் பதக்கம், 60 கிலோ மல்யுத்தப் போட்டியில் யோகேஸ்வர் தட் வெண்கலப் பதக்கம் என 6 பதக்கங்களை அந்தாண்டு இந்தியா கைப்பற்றியது.

2016-ல் பிரேசில் ஒலிம்பிக்கில், பெண்களுக்கான 58 கிலோ மல்யுத்தப் போட்டியில் சாக் ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற பி.வி.சிந்து, இந்தியாவின் இளைய ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

2016-க்கு பின் 4 வருடங்கள் கழித்து, 2020-ல் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டியானது, கொரோனா பெருந்தொற்றால் 2021-க்கு மாற்றப்பட்டு, நாளை மறுநாள் (ஜூலை 23-ம் தேதி) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த 127 வீரர், வீராங்கனைகள் தங்கள் போட்டிக்கான பயிற்சிகளை, தற்போது டோக்கியோவில் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், நியூஸ் 7 தமிழும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆந்திராவில் விநோத முறையில் திருமணம்!

Vandhana

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

EZHILARASAN D

கும்மியடிச்சு கதைய முடிச்சிருவாங்க; விஜய் ஆண்டனியின் விரக்தி ட்வீட்டிற்கு காரணம் என்ன ?

EZHILARASAN D