முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழுதான அமெரிக்க கடற்படை கப்பல்; இந்தியா உதவியுடன் மீண்டும் நாடு திரும்பியது

அமெரிக்க கடற்படைக் கப்பல் ‘மேத்யூ பெர்ரி’ சென்னைக்கு அருகே பழுது பார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது.

அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி ஷிப்யார்டு என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்த்தின் கப்பல் பணிமனையில் மார்ச் 11 முதல் மார்ச் 27, 2023 வரையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பழுதுபார்ப்புப் பணிக்காக இந்தியா வந்த‌ அமெரிக்கக் கப்பற்படையின் இரண்டாவது கப்பல் இதுவாகும். யுஎஸ்என்எஸ் சார்லஸ் ட்ரூ என்ற அமெரிக்கக் கப்பற்படை கப்பல் 2022 ஆகஸ்ட் மாதம் எல்&டி தளத்தில் பழுதுபார்ப்பு பணியை மேற்கொண்டது. இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்கக் கப்பற்படையின் கப்பல்களை தொடர்ந்து பழுது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இதன் மூலமாக நிறைவேறி வருகிறது.2022 ஏப்ரலில் வாஷிங்டனில் நடைபெற்ற‌ அமெரிக்க-இந்திய அமைச்சர்கள் அளவிலான 2+2 பேச்சுவார்த்தையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் இது தொடர்பாக விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவில் உள்ள கப்பல் பழுதுபார்க்கும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்க கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறையின் ஆர்வத்தினை யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரியின் இந்திய பயணம் நிரூபிக்கிறது.

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின் கூறுகையில், “இந்தோ-பசிபிக் நாடு என்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. நமது முக்கிய நலன்கள் இப்பிராந்தியத்துடன் ஆழமாக இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரராக‌ இந்தியா திகழ்கிறது.அமெரிக்கக் கப்பற்படையின் மேத்யூ பெர்ரி கப்பலின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் இந்தியாவில் நடைபெற்றதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுப்படும் என்று நான் நம்புகிறேன்.பாதுகாப்பு கப்பல்களை பயனுள்ள வகையில், திறமையான முறையில் மற்றும் குறைந்த செலவில் பழுதுபார்ப்பதில் பங்குதாரர்களாக இணைவதன் வாயிலாக‌ இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை மிக்க‌ பகுதியாக விளங்கச் செய்வதில் நமது கப்பல் தொழில்துறைகள் கணிசமான பங்களிப்பினை ஆற்றுகின்றன,” என்று குறிப்பிட்டார்.210 மீட்டர் நீளமும், 32.3 மீட்டர் அகலமும், 35,300 டன் திறனும் கொண்ட கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி ஆகும். அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவை 1853ல் ஜப்பானுக்கு வழிநடத்திய கடற்படை கொமடோர் மேத்யூ சி. பெர்ரியின் (1794-1858) நினைவாக இக்கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1812 போரிலும், மெக்சிகன் அமெரிக்கப் போரிலும் பங்கேற்ற‌ அவர், மேற்கிந்தியத் தீவுகளில் கடற்கொள்ளை மற்றும் அடிமை வர்த்தகத்தை ஒடுக்க அனுப்பப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram