முக்கியச் செய்திகள் தமிழகம்

குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது: மா.சுப்பிரமணியன்

குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநில அளவிலான புகையிலை தடுப்பு நடவடிக்கைக்கான கலந்தாய்வு கூட்டம், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் ரூ.30 கோடி மதிப்பில், கடந்த 8 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளது. மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் இந்தப் பொருட்களின் விற்பனை ஜோராக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2 மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மைதான்.

அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால், இன்னும் ஓரிரு மாதங்களில் குட்கா பொருட்களைக் கைப்பற்றி, தடுக்க முடியும். தமிழ்நாட்டில் குட்கா இல்லை என்ற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீர வேண்டும். குட்காவை ஒழிக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் கனவு.

இந்த கூட்டத்துக்கு வந்துள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கும் குட்கா எங்கு கிடைக்கிறது என்று தெரியும். சட்டம் போட்டாலும், அபராதம் வசூலித்தாலும் குட்கா விற்பனை தொடர்கிறது. தண்டனையைக் கடுமையாக்க வேண்டும். குட்கா விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறிந்த உடன், அவற்றை சீல் வைக்க வேண்டும். குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது.

இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement:

Related posts

பேராசிரியை கொலை வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Jeba Arul Robinson

குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து மக்கள் தொகை பிரச்னையை பாஜக கையில் எடுத்திருக்கிறது: சசிதரூர்

Saravana Kumar

சம்பளம் தராத தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Jayapriya