ஒடிசா ரயில் விபத்து: மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மௌன அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சேலத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சேலத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160-க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களது உறவினர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சரி செய்து ரயில் போக்குவரத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஷீத் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. அப்போது விபத்தில் உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதையடுத்து, பழனிபாபா பேரவை மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் நன்றி தெரிவித்து இரங்கல் கூட்டத்தை நிறைவு செய்தார் .

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.