இசையமைப்பாளர் தேவா மறைவு – வைரமுத்து நேரில் அஞ்சலி!

நான் அதிகமாக பாட்டு எழுதியது தேவாவிற்கு தான் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் தேவா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989 ஆம் ஆண்டு தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘தேனிசைத் தென்றல்’ என்று அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவ்வை சண்முகி காதல் கோட்டை மகா பிரபு எட்டுப்பட்டி ராசா உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். இதனிடையே தேவா மறைவுக்கு நடிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பக்கம் இல்லத்தில் தேவாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரமுத்து தேவாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “என் நண்பர் தேவா தூங்கி கொண்டிருக்கிறார். அவர் முன்னாள் ஒரு பெரிய இசையமைப்பாளர், அவர் பின்னால் ஒரு பெரிய இசையமைப்பாளர் அவர்களுக்கு நடுவே அசையா நாற்காலி போட்டு அமர்ந்தவர்.

கானாவுக்கு மரியாதை கொடுத்தவர். உழைக்கும் மக்களின் கானா பாட்டிற்கு ஒரு மரியாதை அளித்தவர். உழைக்கும் மக்கள் அவரது பெருமையை உயர்த்தி பிடிப்பார்கள். ரசிகர்களின் இதயத் துடிப்புக்கேற்றவாறு இசையமைத்தவர் தேவா. நான் அதிகமாக பாட்டு எழுதியது தேவாவிற்கு தான். சென்னையில் ஓவியராக தான் பணியாற்றினார் என்று பலபேருக்கு தெரியாது. சின்ன தயாரிப்பாளர் முதல் பெரிய தயாரிப்பாளர் வரை அனைவரையும் தன் அன்பால் கட்டி போட்டவர். தேவாவின் புகழ் திரையுலகம் இருக்கும் வரை இருக்கும்.

அவரது புகழ் வாழட்டும் அவரது பெருமை ஓங்கட்டும். தேனீர் வாங்கி கொடுக்க ஆள் இல்லாமல் போய்விட்டது. என்னை கொண்டாட ஒரு ஆளில்லாமல் போய்விட்டது. தேவாவின் புகழை நான் இருக்கும் வரை எல்லா மேடைகளிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் உயர்த்திக் கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.